பிக் பாஸ் சீசன்-6 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் போட்டி கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்ற பலரும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு மிக பிரமாண்டமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சீசன் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி, ஞாயிறுகளில் மட்டும் நேரலை செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு சுவாரஸ்யம் நிறைந்த பல்வேறு புதிய ‘டாஸ்குகள்’ வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில், பிரபலம் அல்லாத சாதாரண மக்களில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே, இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
1. ரக்சன்
கலக்க போவது யாரு, குக்கு வித் கோமாளி போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் ரக்சன். கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில் நடித்துள்ளார்.

2. ராஜலட்சுமி
கிராமிய பாடகரான ராஜலட்சுமி, சூப்பர் சிங்கர் மூலம் விஜய் டிவியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

3. தர்ஷா குப்தா
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார்.

4. டிடி
பிரபல தொகுப்பாளரான திவ்ய தர்ஷினி, விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார். ரசிகர்களால் டிடி என்று அழைக்கப்படுகிறார்.

5. ஷில்பா மஞ்சுநாத்
காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஷில்பா. இவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

6. மோனிகா
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் விவாகரத்தான நிலையில், இமானுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை சமூக ஊடகங்களில் மோனிகா பதிவு செய்து வருகிறார்.

7. கார்த்தி குமார்
கண்ட நாள் முதல், அலைபாயுதே, யாரடி நீ மோகினி திரைப்படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இவர் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. அஜ்மல் அமீர்
தமிழ், மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஜ்மல் அமீர்.

9. கிரண்
ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தற்போது வாய்ப்பு கிடைக்காததால் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார் கிரண்.

10. ரோஷினி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணம்மா தொடர் மூலம் அனைத்து வீடுகளிலும் பிரபலமானவர் ரோஷினி. பின்பு, கண்ணம்மா தொடரிலிருந்து விலகி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

11. ஆயிஷா
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சத்யா தொடரில் நடிக்கும் ஆயிஷாவும் பிக் பாஸில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் பிக் பாஸ் தொடக்க விழாவின் போதுதான் தெரியவரும்.