இன்று இருபதுக்கும் அதிகமான பெண் குழந்தைகளை கொண்ட இல்லமாக “ நம்பிக்கை இல்லம்” இருக்கிறது. ஒரு கலெக்டரால் என்ன செய்ய முடியும் ? ஒரு கலெக்டரால் என்னவெல்லாம் செய்யமுடியும் ? சகாயம்.ஐ.ஏ.எஸ்.

0
826

20 வருடங்களுக்கு முன்னால் ஒரு தம்பதி கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் ஊர் அவர்களை ஒதுக்கி வைக்கிறது. அவர்கள் ஊர் , உறவைவிட்டு வேறு ஊர் சென்று பிழைக்க ஆரம்பிக்கிறார்கள். அங்கு கடுமையாக உழைத்து நிலம் வாங்கி தோட்டம் அமைத்து அமைதியாக வாழ ஆரம்பிக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறக்கிறார்கள். வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் தோட்டம் நாளடைவில் சமூக விரோதிகள் நடமாடும் பகுதியாக மாற அந்த குடுமபத்திற்கு பாலியல் தொல்லை அதிகம் ஏற்படுகிறது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண்மணி காவல் நிலையத்தில் சென்று பலமுறை புகார் அளிக்கிறார். ஆனால் காவல்துறை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ,அந்தப் பெண்ணிற்கு ஊர் “ வேசி “ பட்டம் சூட்டுகிறது. நொந்துபோன அந்தப் பெண்மணி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதி வைத்துவிட்டு தன் கற்பை நிரூபிக்க தன்னையே கொளுத்தி கொண்டு எரிந்து சாகிறார்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளான அப்பெண்ணின் கணவர் அந்த ஊரிலுள்ள தன் சொத்தையெல்லாம் விற்றுவிட்டு குழந்தைகளை கூட்டிக் கொண்டு நாமக்கலுக்கு செல்கிறார். அங்கு பாட்டுப்பாடி பிழைப்பு நடத்தி தன் குழந்தைகளை வளர்க்கிறார். ஆனால் தீராத மன உளைச்சலில் இருந்த அவரும் ஒருநாள் மாரடைப்பால் இறக்கிறார். 8 வயது மகனும் , 7 வயது மகளும் அம்மா , அப்பா இருவரையும் இழந்து அநாதைகளாகிறார்கள்.

இந்நிலையில்தான் தீக்குளித்து இறந்த அந்த பெண்ணிற்கு ஆதரவாக சில சமூக ஆர்வலர்கள் போராடியதன் பலனாக அரசு “ஒரு இலட்சம் “ ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உதவித் தொகையை கொடுக்க அந்த குடும்பத்தை தேடுகிறது. அவர்கள் நாமக்கலுக்கு வந்ததை அறிந்து நாமக்கல் மாவட்டஆட்சியரான சகாயம் ஐ.ஏ.எஸ்ஸிடம் இந்த தகவலைக் கொடுக்கிறது.

காஞ்சிபுரத்தில் அந்தப் பெண் தீக்குளித்த சமயத்தில் அங்கு டி.ஆர்.வோ வாக இருந்த தானும் இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டிருந்ததாகச் சொன்னார் சகாயம். உடனே அந்த குடும்பத்தை தேடிக் கண்டுபிடித்தார். அதுமட்டுமில்லாமல் அந்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியை அந்த இரு பிள்ளைகளின் பெயரில் “ வைப்பு நிதியாக “ வைக்க ஏற்பாடு செய்தார்.

வைப்புநிதி வந்தவுடன் அக்குழந்தைகளின் உறவினர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் வந்து தாங்களே குழந்தைகளை வளர்ப்பதாக ஆட்சியர் சகாயத்தை சந்தித்தனர். ஆனால் அவர்களின் வார்த்தைகளில் உண்மையில்லாததை உணர்ந்த அவர் அக்குழந்தைகளின் அப்பாவின் நண்பரிடம் குழந்தைகளை ஒப்படைக்கிறார். மிகவும் அன்பாக அந்த குழந்தைகளை வளர்த்த அவரும் சில மாதங்களில் வயோதிகம் காரணமாக இறக்கிறார். மீண்டும் குழந்தைகள் “ அநாதைகள் “ ஆகிறார்கள்.

இதையறிந்த சகாயம் அவர்களை ஒரு “ குழந்தைகள் காப்பகத்தில் “ சேர்க்கிறார். மாதங்கள் போகிறது. தன் வழக்கமான பணிகளுக்கு நடுவில் திடீரென்று அந்தக் குழந்தைகளின் நினைவு வர அந்தக் காப்பகத்திற்கு சென்று அந்த குழந்தைகளை பார்க்க செல்கிறார் சகாயம். ஆனல் அவருக்கு பெரும் அதிர்ச்சி. காப்பக நிர்வாகிகள் “ விடுதி நிர்வாகம்” பிடிக்காமல் குழந்தைகள் ஓடிப்போய் விட்டார்கள் என்கிறார்கள்.

இந்தக் குழந்தைகள் எத்தனை முறைதான் மீண்டும் மீண்டும் ஆதரவற்றவர்களாகவே இருப்பார்கள் என வேதனையும் கோபமும் அடைகிறார். கொடுங்கதையாய் நீளும் அந்தக் குழந்தைகளின் துயரத்திற்கு முடிவுகட்ட தானே முன்னின்று ஒரு குழந்தைகள் இல்லத்தை “ நம்பிக்கை இல்லம் “ என்ற பெயரில் தொடங்க முடிவு செய்கிறார். தன் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன் நேரடி மேற்பார்வையில் அந்த குழந்தைகளை வளர்க்கிறார்.

அதோடு நிற்காமல், ஒருவேளை தான் டிரான்ஸ்பர் செய்யப்பட்டால் இந்தக் குழந்தைகளை யார் பராமரிப்பது என யோசித்து இதை ஒரு டிரஸ்டாக உருவாக்குகிறார். 2009-இல் மனோகர், Gayathri Devi ( காய்த்ரி தேவி ) இருவரின் பங்களிப்பால் நம்பிக்கை இல்லம் டிரஸ்ட் உருவாகி மேலும் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது.

இன்று இருபதுக்கும் அதிகமான பெண் குழந்தைகளை கொண்ட இல்லமாக “ நம்பிக்கை இல்லம்” இருக்கிறது. சென்ற மாதம் வரை சகாயம் அங்கு சென்று அந்தக் குழந்தைகளை பார்த்து நம்பிக்கையூட்டி ஒரு தகப்பனாக அவர்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து வருகிறார்.

ஒரு கலெக்டரால் என்ன செய்ய முடியும் ? என்ற கேள்வியை கடந்து ஒரு கலெக்டரால் என்னவெல்லாம் செய்யமுடியும் பார் என்று நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறவர் சகாயம்.ஐ.ஏ.எஸ்.

ஒருபுறம் மணற்கொள்ளையர்கள் , ஊழல்வாதிகளிடம் பெருங்கோபமும் , மறுபுறம் ஆதரவற்ற , ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான பேரன்பும் கொண்டிருக்கிற சம காலத்து நம்பிக்கைதான் சகாயம் ஐ.ஏ.எஸ்.

அதனால்தான் நேர்மையற்ற அரசு அவரிடம் அஞ்சி அவரை தள்ளி வைக்கிறது. தமிழக இளைஞர்கள் அவரை எதிர்கால நம்பிக்கையாக எண்ணி நெஞ்சில் வைக்கிறார்கள் .
#SagayamIAS #Makkalpathai #Nambikkaiillam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here