அரசியல் அம்மாவாசை’களை திரையில் சுட்டிக்காட்டிய இயக்குநர் மணிவண்ணன் பிறந்த தினம் இன்று

0
486

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராகவும் கதை-வசன எழுத்தாளராகவும் நடிகராகவும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவரான மணிவண்ணன் பிறந்த தினம் இன்று (ஜூலை 31).

ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் படங்களுக்கும் மணிவண்ணன் நடித்த படங்களுக்கும் இடையிலான எண்ணிக்கை வித்தியாசத்தை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நடிகராக இத்தனை படங்களில் நடிப்பதே இத்தனை அசாத்தியமானது என்றால் ஒரு இயக்குநராகவும் மணிவண்ணனின் வேகமும் உழைப்பும் வியக்கவைக்கும் அளவிளானதுதான். 

நிறைய படங்களை இயக்கியவர் என்பதோடு காதல், ஆக்‌ஷன், கிரைம், த்ரில்லர், குடும்ப உறவுகள், சமூக பிரச்சினை. அரசியல் என பல வகைமைகளைச் சேர்ந்த படங்களை எழுதி இயக்கியவர் அவர். இந்த ஒவ்வொரு வகைமையிலும் மறக்கவும் மறுக்கவும் முடியாத வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்.

பாரதிராஜா இயக்கத்தில் 1980 இல் ‘நிழல்கள்’ படத்தின் கதை – வசனகர்த்தாவாக அறிமுகமானார் மணிவண்ணன். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் மணிவண்ணன் கதை வசனம் எழுதிய இன்னொரு படத்தையும் பாரதிராஜா இயக்கினார். 1981இல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மதம் கடந்த காதலை கொண்டாடிய அந்தப் படம் ‘அலைகள் ஓய்வதில்லை’.

மோகன் – சுஹாசினி-ராதா நடித்து 1982இல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் மூலம் இயக்குநரானார் மணிவண்ணன். கணவனால் ஒதுக்கப்படும் எளிய கிராமத்துப் பெண்ணின் மனநிலையைச் சித்தரித்த அந்தப் படம் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. 

இங்கு தொடங்கிய மணிவண்ணனின் இயக்குநர் பயணம் 80கள் முழுக்கவும் 90களின் இடைப்பகுதி வரையும் தங்குதடையின்றித் தொடர்ந்தது.

இந்த 15 ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கினார் மணிவண்ணன். இவற்றில் ‘இளமைக் காலங்கள்’ (காதல்), ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’ (கிரைம் திரில்லர்), ‘சின்னத்தம்பி பெரிய தம்பி’, ‘வாழ்க்கைச்சக்கரம்'( உறவுகளை மையமாகக் கொண்ட செண்டிமெண்ட்), ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘இனி ஒரு சுதந்திரம்’ (சமூக அரசியல் பிரச்சினைகள்), ‘ஜல்லிக்கடடு’, ‘புது மனிதன்’ (ஆக்‌ஷன்) என பல வகைமைகளில் வணிக வெற்றியைப் பெற்ற படங்களை இயக்கியிருக்கிறார் மணிவண்ணன்.

தமிழில் அரசியல் பகடி படங்களுக்கென்று புது இலக்கணம் வகுத்த ‘அமைதிப்படை’ ஒரு இயக்குநராக மணிவண்ணனை உச்சகட்ட புகழுக்குக் கொண்டு சென்றது. இன்றுவரை அந்தப் படத்தை மறு ஆக்கம் செய்யவோ அதைப்போல் இன்னொரு படத்தைக் கொடுக்கவோ யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு ஒரு அசைக்க முடியாத கல்ட் அந்தஸ்தைப்பெற்ற படம் அது. ‘அமைதிப்படை’ வெற்றிக்குப் பிறகு சத்யராஜுடன் மீண்டும் இணைந்து ‘தோழர் பாண்டியன்’ என்னும் படத்தை இயக்கினார்.

இளமைப்பருவத்திலிருந்தே மார்க்ஸிய இயக்கங்களில் அங்கம் வகித்தவரான மணிவண்ணன் இந்தப் படத்தில் இன்னும் துணிச்சலாகவும் நேரடியாகவும் மார்க்ஸிய அரசியலைப் பேசினார். 

2001இல் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஆண்டான் அடிமை’ படத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகளைச் சாடினார். இதுபோன்ற நேரடி அரசியல் படங்கள் மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும்பாலான படங்கள் போகிற போக்கில் அரசியல், சமூக அவலங்களை விமர்சித்தன. பகடி செய்தன மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பின.

‘நிழல்கள்’ படத்திலிருந்தே நடிக்கத் தொடங்கிவிட்ட மணிவண்ணன் 1990இலிருந்து இயக்குநராக இருந்தபடியே நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். ‘அமைதிப்படை’யில் அதிகாரமிக்க அரசியல்வாதியாகவும் பின்னர் அதிகாரத்தை இழந்த அல்லக்கையாகவும் அவர் நடித்த விதம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. 

அதன் பிறகு சத்யாராஜுடன் சேர்ந்து மற்றொரு அரசியல் படமான ‘தாய் மாமன்‘இல் சுயநலம் மிக்க அரசியல்வாதியாக மணிவண்ணனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘மாமன் மகள்’ படத்தில் சத்யராஜ்-கவுண்டமணியுடன் சேர்ந்து நகைச்சுவை நடிப்பில் பட்டையைக் கிளப்பினார் மணிவண்ணன்.

தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடம்பெறத்தக்க பல மறக்கமுடியாத வெற்றிப் படங்கள் வெளியான ஆண்டு 1996. அந்தப் படங்களுக்கு இந்த ஆண்டு 25ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. ‘காதல் கோட்டை’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘அவ்வை சண்முகி’, ‘கோகுலத்தில் சீதை’ என அந்தப் படங்கள் பலவற்றில் மணிவண்ணனுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன. 

குறிப்பாக ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் பணக்கார அண்ணனாகவும் அவரிடமிருந்து பணம் பறிக்க முயலும் போக்கிரி தம்பியாகவும் அபாரமான வேறுபாட்டைக் காண்பித்து நடித்திருப்பார். 

இதைத் தொடர்ந்து தன்னுடைய மறைவுவரை பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘சங்கமம்’ படத்தில் முதிய கூத்துக் கலைஞராக அந்தக் கலையை உயிருக்கு இணையாக நேசிக்கும் பிரதிநிதியாக அற்புதமாக நடித்திருப்பார்.

தான் இயக்கிய படங்களைப் போலவே நடித்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முற்போக்கு பார்வையையும் தன்னுடைய பகுத்தறிவு கொள்கைகளையும் வசனங்களாக வெளிப்படுத்த மணிவண்ணன் தயங்கியதில்லை. 

அவற்றைக் கதை. காட்சி. கதாபாத்திரம் ஆகியவற்றின் சட்டகத்துக்குள் லாகவமாகப் பொருத்தும் கலையில் அவருக்கு அபாரமான திறமை இருந்தது.

ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருந்த மணிவண்ணன் அரசியல் இயக்கங்களிலும் அவை சார்ந்த செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். 

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளைப் பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் பின்பற்றினார். மார்க்ஸியம். பகுத்தறிவுவாட்தம். தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் சித்தாந்தங்களில் தீவிர பயிற்சியும் பற்றுதலும் கொண்டவராகக் கடைசி வரை இயங்கினார்.

2013 ஜூன் 15 அன்று உடல்நிலை மோசமடைந்ததால் மரணமடைந்த மணி வண்ணன் அவர் எழுதிய, இயக்கிய திரைப்படங்கள், நடித்த கதாபாத்திரங்கள், இவற்றின் மூலம் தமிழ்மக்கள் மனங்களில் விதைத்த கருத்துகள், சிந்தனைகள் ஆகியவற்றின் மூலம் என்றென்றும் அழியாமல் வாழ்வார்.

FREE COACHING – UPSCTNPSCNEETJEE & NDA

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது துணை 18 ஆட்சியர், 26 டிஎஸ்பி உள்பட 92 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022-23ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC