இந்தியாவில் மதவெறியர்களை கண்டிக்கும் சாய் பல்லவி: ஒற்றுமை ஒன்றே தீர்வு

0
80

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தெலுங்கில் ரானா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்து இருக்கும் ‘விரட்டா பர்வம்’ படம் நேற்று வெளியானது. இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி இணையத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளார் சாய் பல்லவி.

சாய் பல்லவி அளித்த பேட்டியில் “காஷ்மீர் பைல்ஸ்” படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சாய் பல்லவியின் இந்த கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல விவாதங்கள் எழுந்தது. பாஜகவை சேர்ந்த சிலர் அவரின் இந்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சாய் பல்லவி இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், “சமீபத்தில் நான் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் இடதுசாரியா? வலதுசாரியா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான், எனக்கு நடுநிலையில் நம்பிக்கை உள்ளது. நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்று கூறினேன்.

அதில் காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கும்பல் படுகொலை ஆகிய 2 விசயங்களை நான் குறிப்பிட்டு பேசினேன். காஷ்மீர் பைல்ஸ் இயக்குநருடன் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. 3 மாதங்களுக்கு முன் காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்டதை அவரிடம் கூறினேன். அதேபோல் கொரோனா ஊரடங்கின்போது கும்பல் படுகொலை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறுதான்.

சிலர் கும்பல் படுகொலைகளை நியாயப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. யாருடைய உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு மருத்துவராக அனைத்து உயிரும் சமம், முக்கியம் என்று நம்புகிறேன். அடையாளத்தின் பெயரால் யாரும் யாரையும் பார்த்து பயப்படக்கூடாது. பள்ளி படிக்கும்போது அனைத்து இந்தியர்களும் எனது சகோதர சகோதரிகள் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். அது எனது மனதில் நன்கு பதிந்துள்ளது. சிறுவயதில் நாங்கள் சாதி, மதம், கலாச்சாரத்தால் வேறுபாடு பார்த்ததில்லை. நாங்கள் எப்போதும் நடுநிலையாகவே இருந்திருக்கிறோம்.

நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டார்கள். முக்கிய நபர்கள், இணையதளங்கள் எனது முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு பதிவிட்டு உள்ளனர். நான் சொன்னதன் உண்மை தன்மையை அவர்கள் ஆராயவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தனிமையாக உணர்ந்தேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார் சாய் பல்லவி. அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.