மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அகமுடையார் சாதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 25). இவர் இளநிலை உதவியாளராக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து வந்தவர் விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் பகுதியைச் சேர்ந்த வினோதா (வயது 23). இவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சுந்தரராஜூக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெற்றது. தான் பட்டியலினச் சமுகத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதை வீட்டில் கூற தயங்கிய சுந்தர்ராஜ், பல மாதங்களாக தன் காதலை குடும்பத்தினரிடமும், ஊராரிடமும், மறைத்துள்ளார். இருப்பினும் சுந்தர்ராஜூவின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததாகவும், அவரை காதலை விட்டுவிடும் படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இந்திரா நகரில் தனி வீடு எடுத்து தங்கி இருக்கும் சுந்தர்ராஜ் வீட்டிற்கு கடந்த 6ஆம் தேதி அன்று வினோதா சென்றார். அதற்கு மறுநாளான 7ஆம் தேதி இரவு வினோதாவின் பெற்றோருக்கு அப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வினோதாவின் சகோதரர், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட பிணவறைக்கு சென்று தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் வினோதாவின் சடலத்தை பார்த்தார். தன் தங்கையின் நெற்றியிலும், பின்னத் தலையிலும் பலத்த காயத்தை கண்ட வினோத், வினோதாவின் இறப்பில் மர்மம் இருப்பதை உணர்ந்தார்.
வினோதாவை தற்கொலை செய்யவில்லை யாரோ கொலை செய்திருப்பதாக உறுதிப்பட தெரிவித்து, காவல்துறையினர் வாக்குவாத்திலும் ஈடுபட்டார். திருவண்ணாமலை கிழக்கு டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் பிரச்னையில் இருந்து நழுவியதை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஏஎஸ்பி ஒருவர் உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
காதல் விவகாரம் காரணமாக கொலை செய்திருப்பது உறுதியான நிலையில், சுந்தர்ராஜின் உறவினர்கள் தான் பட்டியலினச் சமூகப் பெண்ணை தங்கள் வீட்டுப் பையன் காதலிப்பதை விருப்பாமல் கொலை செய்திருப்பதாக ஊரேச் சேர்ந்து குற்றம்சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள், ஆணவக் கொலைகள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.