மைக்கை தூக்கிட்டு இனி யாரும் தியேட்டர் உள்ளே போக முடியாது

0
853

யூ டியூப் உள்பட சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனங்களை செய்வதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளது.

திரைப்பட வசூலில் சமூக வலைளதங்கள் பெரும் தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகின்றன. ஒரு படத்தைப் பற்றிய நெகடிவான கருத்தை ரசிகர்களிடம் திணிக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் அந்த படத்தை தவிர்த்து விடுகிறார்கள்.

இதேபோன்று கடந்த சில வாரங்களாக பாய்காட் என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் நடந்தது. இதன் அடிப்படையில் மிகவும் திறமைவாய்ந்த கலைஞர்களின் படங்கள் கூட, படுதோல்வியை சந்தித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

ஒரு படம் உண்மையிலேயே தரமானதாக இருந்தாலும் கூட, விமர்சகர்கள் ஏற்படுத்தும் மன ரீதியிலான எதிர்மறை தாக்கம், படத்தின் வசூலை பாதித்து விடுகிறது. இந்நிலையில் படம் வெளியான 3 நாட்களுக்கு பின்னரே விமர்சனங்களை சமூக வலைதளங்களில் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வரவுள்ளது.

சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் என். ராமசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே. சுரேஷ், கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 500க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.