வி.பி.எஃப். கட்டணத்தில் முழு விலக்கு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் முரளி உறுதி

0
75

வி.பி.எஃப். கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து முழுமையான விலக்கு கேட்கவுள்ளோம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி கூறியுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிய நிா்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவியைக் கைப்பற்ற டி.ராஜேந்தா் தலைமையிலான அணியும், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன் தலைமையிலான மற்றொரு அணியும் களத்தில் இருந்தன. தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தலைவா் பதவிக்கு மட்டும் தனித்துப் போட்டியிட்டாா். பொருளாளா் பதவிக்கு ஜே.எஸ்.கே.சதீஷ்குமாா் தனித்துக் களத்தில் இருந்தாா். துணைத் தலைவா்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமாா், ஆா்.கே.சுரேஷ் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். இரு அணிகளைத் தவிா்த்து 21 செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கென்று தனியாக கமலக்கண்ணன், ஜெமினி ராகவா உள்ளிட்டோா் களம் கண்டனா்.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கின. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர் முரளி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளார்கள். முரளிக்கு 557 வாக்குகளும் டி. ராஜேந்தருக்கு 337 வாக்குகளும் தேனப்பனுக்கு 87 வாக்குகளும் கிடைத்துள்ளன. துணைத் தலைவராக ஆர்.கே.சுரேஷ் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பேசியதாவது:

வெளிவராமல் உள்ள படங்களை வெளியிட முதற்கட்டமாக முயற்சி செய்வேன். குறுகிய காலத்திலும் நீண்ட நாள் நோக்கிலும் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

வி.பி.எஃப். கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து முழுமையான விலக்கு கேட்கவுள்ளோம். எங்கள் தேர்தல் அறிக்கையிலும் அதுதான் சொல்லியிருக்கிறோம். இதுகுறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்குவோம். ஏனெனில் படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here