மறைந்த நடிகர்.புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு கிடைத்த பார்வை

0
914

பெங்களூரு :

”மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள்” மூலம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

கன்னட முன்னணி சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று (அக்.,31) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புனித் தனது இரு கண்களை தானமாக வழங்கி இருந்தார்.

தானமாக வழங்கப்பட்ட அவரின் கண்களை நாராயண நேத்ராலயா மருத்துவமனை தலைவர் புஜங்கஷெட்டி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். வழக்கமாக கண்களை அதிகபட்சம் இருவருக்கு தான் பொருத்த முடியும். ஆனால், புனித் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

இது குறித்து புஜங்கஷெட்டி நேற்று கூறியதாவது: இரண்டு கண்கள், இருவருக்கு தான் பொருத்தப்படும். ஆனால், புனித்தின் கண்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நால்வருக்கு பொருத்தியுள்ளோம். அதாவது ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டினோம். ‘கார்னியா‘ எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதியாக தனி தனியாக பிரிக்கப்பட்டது. முன் பகுதி விழிப்படலம் இருவருக்கும்; பின் பகுதி விழிப்படலம் இருவருக்கும் பொருத்தினோம்.

நாங்கள் மேற்கொண்ட முயற்சியே வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக உள்ளோம். புனித்தின் இரு கண்களும் ஆரோக்கியமாக இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று. கண்கள் பொருத்தி கொண்டவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரு பெண், மூன்று ஆண்கள் என நான்கு பேரும் கர்நாடகாவை சேர்ந்த இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 30ல், நாள் முழுவதும் மருத்துவர்கள் தீவிர முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராஜ்குமாரும், அவரது மனைவி பர்வதம்மாவும் 1994ல், முதல் முறையாக நாராயணா நேத்ராலயாவில் கண் தான வங்கி துவக்கி வைத்தனர். 2006ல், ராஜ்குமார் இறந்த போது அவரது கண்களும்; 2017ல் பர்வதம்மா இறந்த போது அவரது கண்களும் தானம் செய்யப்பட்டது. பெற்றோர் போன்று புனித்தும் கண்களை தானம் செய்தார். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here