நிரந்தரமாக மூடப்படுகிறது ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம்…!

0
2810

சென்னை வடபழனி பகுதியில் இயங்கி வந்த ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்த ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்படுகிறது என்ற அறிவிப்பை அறிந்து நடுத்தர குடும்பத்து மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களை மகிழ்வித்த ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடல்

உலகம் முழுவதும் ஏராளமான பாதிப்புகளை தனிமனித வாழ்விலும், நிறுவனங்களின் மீதும் நிகழ்த்தியிருக்கும் கொரோனா தற்போது சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கை நிரந்தரமாக மூட வைத்துள்ளது.

சென்னையில் திரையரங்கில் திரைப்படங்களை காண மல்டிபிளக்ஸ், ஐமேக்ஸ், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்கம் என்று பல்வேறு வகையான திரையரங்கின் மூலம் மக்கள் திரைப்படங்களை கண்டு மகிழ்ந்தாலும் நடுத்தர மக்களின் வருமானத்திற்கு ஏற்ப அவர்களை பெரிதளவு மகிழ்வித்து அவர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற ஒரு திரையரங்கம் என்றால் அது ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கமே…!

சினிமா என்ற இரு வார்த்தைகளுக்குப் பின் எல்லோருடைய மனதிலும் யதார்த்தமாக ஒட்டிக்கொள்ளும் இன்னொரு பெயர் ஏ.வி.எம். ஸ்டுடியோஸ். 1970களில் ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக கட்டப்பட்ட திரையரங்கம் தான் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இந்த திரையரங்கம் குறித்து கூற வேண்டும் என்றால் ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம், அவ்வளவு நினைவுகளையும், திரை வரலாறுகளையும் சுமந்து நிற்கிறது. சென்னை வடபழனி முருகன் கோவில் பகுதி அருகே உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவின் வளாகத்தில் தான் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது.

இன்றளவும், நியாயமான விலையில் திரைப்படம் பார்க்க விரும்பும் திரை ரசிகர்கள் ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கையே அணுகுவார்கள். கால மாற்றத்துக்கு ஏற்றபடி உட்கட்டமைப்பு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு என்று பல மாற்றங்களை கொண்டு வந்தாலும், அதைக் காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்தியதில்லை. இன்று வரை, அரசு நிர்ணயித்த தொகையையே டிக்கெட் கட்டணமாக வசூலித்து வருகிறது.

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. நிலைமை சீராகி இயல்புக்கு வந்துவிட்டாலும், பொதுமக்கள் திரையரங்கு வருவது என்பது உறுதிபடுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது என்று பல்வேறு கருத்துக்கனிப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், நிரந்தரமாக திரையரங்கை மூட ஏ.வி.எம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here