நீலகிரியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கொள்முதல் விலையாக 30 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சிறு குறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்த தொழிலை நம்பி 65 ஆயிரதுக்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் உள்ளனர். தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலைகளை விவசாயிகள் விநியோகம் செய்து வருகின்றனர். பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இதனால் விவசாயிகள் பச்சை தேயிலை பறித்து விநியோகம் செய்ய முடியாமல், செடிகளில் பரிக்காமல் விட்டுவிட்டனர். விவசாயத்தை நம்பி இருந்தத ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தேயிலை விவசாயம் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் தேயிலைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானதால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து தேயிலைத்தூள் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், தேயிலை தொழிற்சாலைகள், குறைந்தபட்ச கொள்முதல் விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்று 30 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் பச்சை தேயிலைக்கு அதிக பட்ச விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி தரமான பச்சை தேயிலைக்கு அதிகபட்சமாக 35 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.