தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிப்பு

0
24

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் , பிப்ரவரி 14 -ம் நடைபெற்ற உள்ளரங்க கூட்டத்தில் ,தி.மு.க அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதியின் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோர்க்கு தி.மு.க பிரதிநிதித்துவம் பெற்றுத்தந்தது என்றும், இது தொடர்பான ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டி அது தி.மு.க போட்ட பிச்சை என்றும் ஆர்.எஸ். பாரதி பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம், அளித்த புகாரின் பேரில்,வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டது .


இந்நிலையில் இன்று அதிகாலை நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டில் வைத்து மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் . அதைத்தொடர்ந்து எழும்பூரில் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தி. மு.க பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்கூடி இருந்தனர் . மேலும் இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இடைக்கால ஜாமின் வழங்கினார் .

இது குறித்து தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொரோனா கால ஊழலையும் , நிர்வாக தோல்வியையும் திசை திருப்பவே பாரதி கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் .மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசு தட்டி எடுத்து கைது செய்து இருப்பதற்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்து உள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here