வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவா்கள் வீடுகளுக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே செல்வதை அரசு இனியும் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், அவா்களது செயல்கள் சமூகக் குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்..
இந்தியவில் தற்போது 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே நேரடியகோ, அல்லது மறைமுகவோ வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் மூலமாக வைரஸ் தொற்றில் அகப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்களை அரசு தனிமைபடுத்தி காவலில் வைத்துள்ளது. அவர்களில் திருந்தாத ஒரு சிலர் காவலையும் மீறி மார்க்கெட் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியா போன்ற மூன்றாம் நிலை நாடுகளில் இத்தாலி போன்று கொரோனா பரவினால் பல லட்சம் உயிர்கள் போகும் என்ற அச்ச உணர்வு இல்லாமல் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வது பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்,
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், அரசு உத்தரவை மீறி வெளியே சென்றால் கடும் நடவடிக்கையுடன் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் லண்டனில் இருந்து வந்த இளைஞா் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவா் தன்னை முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாததால் அவரது தாய்க்கும் அந்த பாதிப்பு இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.