கருணையின் வடிவான காவல் ஆய்வாளர்! தாராளமாக உதவிய காவலர்கள்.!

0
307

சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம் நகரில் உள்ள பிளாட்பாரத்தில் வசித்த ராஜேஸ்வரி (59), விஜயலட்சுமி(58), பிரபாவதி (57) இவர்கள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள்.!

சென்னை ஓட்டேரிக்கு வந்த இவர்கள் குப்பைகளைப் பொறுக்கி வாழ்ந்து வந்தனர்.இந்தச் சமயத்தில்தான் ஊரடங்கால் மூன்று சகோதரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் பசி, பட்டினியால் மூன்று பேரும் பாதிக்கப்பட்டனர்.!

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் உயிர் நேற்று காலை பிளாட்பாரத்திலேயே பிரிந்தது. அவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டுசெல்ல வழிதெரியாமல் விஜயலட்சுமியும் ராஜேஸ்வரியும் கதறி அழுது கொண்டிருந்தனர்.அவ்வழியாகச் சென்றவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் பிரபாவதியின் சடலம் நீண்ட நேரமாக பிளாட்பாரத்திலேயே கிடந்தது. அதன் அருகில் சோகத்துடன் அவரின் சகோதரிகள் அமர்ந்திருந்தனர்.

இந்தத் தகவல் தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா, ஏட்டு பழனி, ஜான் மேனகா குமரன் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு எலும்பும் தோலுமாக, கிழிந்த சேலை அணிந்தபடி பிரபாவதி கிடந்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போலீஸ்காரர்களை அனுப்பி சேலை, சோப், பூ, மாலை என இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும்படி கூறினார்.அந்தப் பொருள்கள் வந்ததும், அருகில் உள்ள வீட்டிலிருந்து தண்ணீரை குடங்களில் போலீஸ் டீம் கொண்டு வந்தது. பிளாட்பாரத்திலேயே சேலை மறைவில் பிரபாவதியைப் பெண் போலீஸார் மற்றும் அங்குள்ள பெண்கள் சிலர் குளிப்பாட்டினர். பிறகு புதிய சேலை அணிவித்து, பிரபாவதியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை முன்னின்று போலீஸ் டீம் செய்தது. ஓட்டேரி மயானத்துக்கு பிரபாவதியின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here