தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

0
36

ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 6ஆவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:

பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30.6.2020 இரவு 12 மணி வரை அமல்படுத்திய முழு ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை தொடரும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

  • நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.
  • அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
  • நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
  • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
  • வணிக வளாகங்கள் (shopping Malls).
  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
  • திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
  • அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
  • மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து கிடையாது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

முழு ஊரடங்கு:
5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்:

  • திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here