கொரோனாவால் டிரெண்ட் ஆகும் நடிகர் கரண் பட பாடல்…!

0
2733

11 வருடங்களுக்கு முன்பு நடிகர் கரண் நடித்த மலையன் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள சோக பாடல் ஒன்று கொரோனா வைரஸ் காரணமாக இப்போது திடீரென டிக்டாக்கில் டிரெண்டிங் ஆகியுள்ளது…!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உருவான இந்த வைரஸ், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளை பதம் பார்த்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். அதற்குப் பிறகும் இது நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கரண் நடித்த மலையன் பட பாடல், டிக் டாக் செயலியில் திடீரென டிரெண்டாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஷம்மு, உதயதாரா, சக்திகுமார், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. த்ரிசம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாலா சுப்பிரமணியன், பி.கே.ரகுராம் தயாரித்திருந்தனர். கோபி இயக்கி இருந்தார். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளி பற்றிய கதையை கொண்ட இந்த படம் தமிழக அரசின் விருதுகளை பெற்றது.

இந்தப் படத்துக்காக தீனா இசையில், சினேகன் எழுதிய சோக பாடல், ‘பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா’. இந்தப் பாடல், படம் வெளியான காலத்தில் ஹிட்டாகி இருந்தது. இப்போது, 11 வருடம் கழித்து டிக் டாக்கில் திடீரென டிரெண்டாகி இருக்கிறது. இதுபற்றி கேட்டபோது, ‘ எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார் இயக்குனர் கோபி …

அவர் மேலும் கூறும்போது, இதை பற்றி சிலர் சொன்னதைக் கேட்டு நானும் பார்த்தேன். கொரோனா பாதிப்பால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் கணவனை நினைத்து பெண்கள் பாடுவதுபோல இது இருக்கிறது. சிலர் காதலனை நினைத்து பாடுகிறார்கள். சில பெண்கள் கையில் தாலியை கையில் பிடித்துக்கொண்டு பாடுவதைக் பார்த்தபோது எனக்கே கண்கலங்கிவிட்டது என்றார் மலையன் பட இயக்குனர் கோபி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here