தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வோளாண் மண்டல மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மசோதா மீது பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாக்கவும் இந்த மசோதா உதவிடும் என குறிப்பிட்டார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட உடன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து 10 நாட்களில் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான மசோதாவை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் கிடைத்துள்ளது என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மசோதாவில், காவிரி டெல்டாவைச் சேர்ந்த திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுபட்டதற்கு என்ன காரணம்? என்றும் அவர் வினவினார். இந்த மசோதா விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பை தரும் மசோதாவாக இருக்கும் வகையில் கொண்டு வர இதனை தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அரசை கேட்டுக்கொண்டார்.

மசோதாவை சட்டமாக இயற்றுவதன் மூலம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதுமட்டுமின்றி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்படும் என்றும், தனது தலைமையில் அந்த அமைப்பு செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here