காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை உயிரிழப்பு: வேதனையுடன் மக்கள் இறுதி மரியாதை…!

0
55

நாட்டு வெடிகுண்டை கடித்ததில் வாயில் காயம்பட்டு உணவருந்த முடியாமல் சுற்றிவந்த மக்னா யானை பரிதாபமாக உயிரிழப்பு. மக்னா யானைக்கு, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வேதனையுடன் இறுதி மரியாதை செய்தனர்.

அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா வந்ததை அடுத்து 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். வெடி வெடித்து யானையின் நாக்கு 80 சதவீதம் அறுபட்டு சேதம் அடைந்து இருந்ததால், அந்த யானையால் சாப்பிடவோ, குணப்படுத்தவோ இயலாத நிலை இருந்தது. இதனால் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனைக்கட்டி வழியாக கேரள வனப்பகுதியான சோலையூர் மரப்பாலம் அருகே நகர முடியாமல் நின்று கொண்டிருந்த மக்னா யானை, நேற்று மாலை படுத்துவிட்டது. இந்நிலையில் இன்று காலையில் மக்னா யானை பரிதாபமாக உயிரிழந்தது. வாயில் காயம்பட்டு உணவருந்த முடியாமல் உயிரிழந்த மக்னா யானைக்கு, அப்பகுதி மக்கள் வாழைப்பழம், தேங்காய், துண்டு, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வந்து யானைக்கு மாலை அணிவித்து பாடல் பாடியும், பூஜை செய்தும் இறுதி மரியாதை செய்தனர்.

காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அவற்றை காக்க முன்வர வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழும் போது மனிதர்களுக்கும் சரி, விளங்குகளுக்கும் சரி அக்கறை காட்டாத மனித இனம் இறந்த பின்பு இரக்கம் காட்டுவது காலம் காலமாக நடந்து வரும் வாடிக்கையான செயல். மனிதனோ, விளங்கோ உணவு அருந்த முடியாமல் பசியோடு இறப்பது எவ்வளவு பெரிய கொடுமையான செயல். யானை என்பது விளங்கு இனத்தில் உள்ள ஒரு மகத்தான ஜீவராசி, அதற்கு வெடி வைத்து ரசிக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு கொடூர எண்ணம் இருக்கும் என்று நாம் எண்ண வேண்டும். உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக எண்ணில் அடங்காத பல்வேறு பேரிடர் மற்றும் நோய் தொற்று போன்றவற்றால் மக்கள் அவதிப்பட்டாலும் என்றும் திருந்தாத ஒரு ஜென்மம் என்றால் அது மனித இனம் தான்…! – சொந்த கருத்து… யார் மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here