வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. 45 வயதான இவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.இவர் அரசு பணி வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் .அதற்கான ஆவணங்களையும் அவர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் பணம் வாங்கி மோசடி செய்ததாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மணி மீது ஏராளமான மோசடி புகார்கள் அடுத்தடுத்து வந்தன.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மணி அதிகாலை தீவட்டிப்பட்டி அருகே உள்ள அவரது வீட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணியை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
This is the last page