பாகிஸ்தானின் பாழடைந்த உயிரியல் பூங்காவில் பல ஆண்டுகளாக தனிமையிலிருந்த காவன் யானை கம்போடியாவுக்கு இடமாற்றப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மற்றொரு யானையை சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தது காவன்.

யானையே இல்லாத பாகிஸ்தான் நாட்டிற்கு 1985-ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயது யானைக்குட்டி வழங்கப்பட்டது. அந்நாட்டின் ஒற்றை ஆசிய யானையாக காவன் தனிமையில் தவித்தது. அதற்கு துணையாக 2009-ல் சாஹேலி பெண் யானை ஒன்று சேர்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நாட்டின் சீதோஷன நிலை தாங்காமல் 2012-ல் அந்த யானை பரிதாபமாக இறந்தது. இதனால் மீண்டும் தனிமையில் உழன்றது காவன்.
இஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவில் சுவரில் தலையை முட்டியபடி அது பரிதாபமாக நிற்கும் புகைப்படம் உலகெங்கும் வைரலானது.

36 வயதாகும் காவனை பாகிஸ்தான் அரசு முறையாக பராமரிக்கவில்லை. கோடைக்காலத்தில் கூட சங்கிலியால் பிணைத்து வைத்ததாக விலங்கு நல செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். தற்போது அந்த வைரல் புகைப்படம் மூலம் காவனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அதன் மீட்புக்காக அமெரிக்க பாப் பாடகி ஷேர் குரல் கொடுத்தார்.

சர்வதேச விலங்குகள் நல அமைப்பான ‘போர் பாஸ்’ முயற்சியால் காவன் திங்களன்று கம்போடியாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.சவலான பயணமாக இது அமைந்ததாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த அந்த அமைப்பினர் கூறினர். “பெரிய யானைகள் ஒரு சில முறை மட்டுமே விமானத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. காவனுக்காக ரஷ்ய ஜம்போ சரக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. 7 மணி நேர விமான பயணத்தில் யானை உண்பதற்கு 200 கிலோ உணவு பொருட்களை வைத்தோம்.

அதன் கூண்ட்டில் 200 லிட்டர் சிறுநீர் சேகரிப்பானையும் பொருத்தினோம்.” என்றனர். கம்போடியா விமான நிலையம் வந்திறங்கியதும் அதனை அமெரிக்க பாடகி ஷேர் நேரில் வரவேற்றார்.இன்று (டிச.01) காவன் யானை கம்போடியாவில் உள்ள குலன் ப்ராம் டெப் எனும் வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றது. 8 ஆண்டுகளுக்கு பிறகு காவன் அங்குள்ள மற்றொரு யானையை சந்தித்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்து அந்த யானையின் துதிக்கையை நீட்டியது.

பதிலுக்கு அந்த யானையும் துதிக்கையை நீட்டியது. இந்த உணர்ச்சிப்பூர்வ காட்சிகள் ஆனந்த கண்ணீர் வரவழைப்பதாக இருந்தன. அதன் நடவடிக்கைகளை சிறிது நாட்கள் கவனித்த பிறகு சுதந்திரமாக உலா வர அனுமதிப்பார்கள். இனி காவனுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்கின்றனர்.