ஈரான் தனது முதல் ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மெசென்ஜர் ராக்கெட் மூலம் நூர் செயற்கைகோளை செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள ராணுவம், பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து, கடந்த ஜனவரியில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக செயற்கைகோளை விண்ணில் செலுத்த ஈரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் ஈரானின் முதல் ராணுவ செயற்கைகோள் வெற்றியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ஈரானில் உள்ள பாலைவனத்தில் இருந்து ஈரானின் முதல் ராணுவ செயற்கைகோளான நூர் செயற்கைகோள் இரண்டு நிலைகளில் விண்ணில் செலுத்தப்பட்டது. இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கைகோள், புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக சுற்றி வருவதாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. நூர் செயற்கைகோள் புவி வட்டபாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக ஈரான் ராணுவம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.