இந்தியன் 2: படப்பிடிப்பில் நேர்ந்த சோகம், உயிர் தப்பிய கமல்

0
1248

படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகளை படம்பிடிப்பதற்காக, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் இன்றிரவு (புதன்கிழமை) நடைபெற்று வந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதவி இயக்குநர் கிருஷ்ணா, உணவு விநியோகிப்பாளர்களான மது, சந்திரன் ஆகிய மூன்று பேர் இந்த விபத்தில் பலியாகினர்.

படுகாயமடைந்த மேலும் 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து படக்குழுவினர் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சங்கர் -கமல் கூட்டணி, கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் லஞ்ச, லாவணியத்தை தட்டிக்கேட்டு ‘இந்தியன் தாத்தா’ ரோலில் கமல் ஹாசன் அசத்தலாக நடித்திருந்தார். தற்போது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சங்கர் -கமல் ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here